நான்கையும் பாருங்கள் - தேசீயத்துரோகி குடி அரசு - கட்டுரை - 07.021932

Rate this item
(0 votes)

சீனாவைப் பாருங்கள்

தற்காலத்தில் சீனதேசம் ஆபத்தான நிலைமையிலிருந்து கொண்டிருக்கிறது. ஜப்பான் அதை ஓட ஓட விரட்டுகிறது. ஜப்பானுடன் எதிர்த்து நின்று போர் செய்யும் வல்லமை சீனாவுக்கு இல்லை. ஆகையால் அது சர்வதேச சங்கத்தினிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சங்கமும் இத் தனை நாட்களாக ஒரு முடிவுக்கும் வராமலிருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சர்வ தேசங்களுக்கும் சொந்தமாக இருக்கும் பிரதேசத்தில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதால் சீனா ஜப்பான் தகராறில் சர்வதேச சங்கமும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இது எப்படியாவது போகட்டும். சீனா இத்தகைய பலமற்ற நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை மாத்திரம் கொஞ்சம் கவனிப்போம். 

சீனாவில் சரியான சீர்திருத்தம் ஏற்படவில்லை . சீனாவின் மக்கள் ஏறக் குறைய இந்தியா மக்களைப் போன்றவர்கள். பழய நாகரீகத்தை விடாப் பிடி யாக பிடித்திருப்பவர்கள். சீனாவில் சீர்திருத்த நோக்கமுடைய கூட்டத்தாரும் இருக்கின்றனர். அவர்கள் நம்மைப் போன்ற - அதாவது சுய மரியாதை இயக்கக்காரர்களைப் போன்ற சீர்த்திருத்தக்காரர்கள், ஒரு பக்கம் பழமையை உயிர்போனாலும் விடக் கூடாது என்ற கொள்கையை உடைய மக்கள் இருக் கின்றனர். அவர்கள் நாட்டின் அரசியலில், கவனம் இல்லாதவர்கள். அவர்கள், பரலோகத்துக்கான காரியங்களிலேயே கருத்துள்ளவர்கள். சுருங்கக் கூறினால் நமது நாட்டு வருணாச்சிரம வைதீகர்களின் பங்காளிகள், அல்லாமலும் முதலாளிக் கூட்டத்தாரும் சீனாவில் மிகுதியாக இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மனைவியுடன் மக்களுடனும் சுகபோக வாழ்க்கை வாழ்வதில் தான் கருத்துடையவர்கள். ஆகையால் அவர்களுக்கு நாட்டைப் பற்றிய கவனம் சிறிதும் இல்லை . 

 

அன்றியும் அங்கு ஏழை மக்களின் கூட்டம் மிகுதி. ஆகையால் சைனாவில் பொதுவுடமைப் பிரசாரமும் அதிகம். இவ்வியக்கமும் பலமாக இருக்கிறது. இவர்களும் ஒரு புறத்தில் உள்நாட்டு அரசியலை ஸ்தாபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். 

ஆகவே இதுவரையிலும் கூறியவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் சைனாவின் மக்கள் பழய நாகரீகத்தில் - மூட நம்பிக்கையில் இன்னும் கருத்துடையவர்களாக இருப்பதால் அவர்களிடம் ஒற்றுமை யில்லை. பலமான அரசாங்கம் ஸ்தாபிக்க முடியவில்லை. ஆகையால் அது அந்நிய தேசப்படையெடுப்புக்குக் கட்டுப்பட்டு பயந்து கொண்டிருக்கிறது. எல்லா வல்லரசுகளும் சைனாவின் பிரதேசத்தில் ஆதிக்கம் வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

இதனோடு நமது நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறோம். சீன மக்கள் மனத்தில் உண்டாயிருக்கும் கொஞ்சம் மாறுதல் கூட இன்னும் நமது மக்களின் மனத்தில் உண்டாகவில்லை. அவர்களுக்கிருக்கும் குறைந்த ஒற்றுமையில் லட்சத்தில் ஒரு பங்கு ஒற்றுமை கூட நமது மக்களிடம் உண்டாகவில்லை . இந்த நிலையில் நமக்குப் பூரண சுயேச்சை கிடைத்துவிட்டால்? நம்மை விரட்ட யார்தான் முன்வர மாட்டார் கள்? இளைத்தவன் தலையில் மிளகாய் அரைக்க நினையாதவர்கள் யாரேனும் உண்டா? ஆகையால்தான் முதலில் மக்கள் மனத்தில் உள்ள மூடத் தனத்தை அகற்றுங்கள். ஒற்றுமையை உண்டாக்குங்கள்! ஜாதி மதங்களை ஒழியுங்கள்! பூரண சுயேச்சை பெறலாம் என்று கூறுகிறோம். 

தீண்டாதாரின் சமத்துவப் போர் குருவாயூர் ஆலய தர்மகர்த்தாக்கள் தீண்டாத வகுப்பினரின் சத்தியாக் கிரகத்திற்குப் பயந்து இதுவரையிலும் கோயிலை மூடிவைத்து விட்டனர். சென்ற 28-1-32ல் மீண்டும் திறக்கப்பட்டது. அப்பொழுது தீண்டாதவர்களும் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். 

பண்டரிபுரத்தில் உள்ள கோயிலுக்குள் போக விரும்பி தாழ்த்தப்பட்ட வர்கள் தர்மகர்த்தாக்களை அனுமதி கேட்டனர். அவர்கள் அனுமதி தர மறுத்துவிட்டனர். உடனே தீண்டத் தகாதவர்கள் அனைவரும் சத்தியாக் கிரகம் செய்வதெனத் தீர்மானித்து விட்டனர். 

மேற்கண்ட இரண்டு செய்திகளைப் பற்றி கொஞ்சம் ஆலோசித்துப் பாருங்கள். குருவாயூர் கோயில் பூனைகள் கோயிலைப் பூட்டி வைக்க சம்மதித்தார்களே யன்றி அதற்குள் தாழ்த்தப்பட்டவர்களைப் போக விடச் சம்மதித்தார்களில்லை. பல நாட்களாகச் சிறையிலிருக்கச் சம்மதிக்கும் குருவாயூர் சாமி, தீண்டத்தகாதவர்கள் தன்னிடம் வர சம்மதிக்கவில்லையா? 

 

இனி பண்டரிபுரப் பார்ப்பனர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களும் பூட்டி வைக்கப் போகிறார்களா அல்லது குருவாயூர்ப் பிரகஸ்பதிகள் செய்ததுபோல் முள்வேலி போடப் போகிறார்களா? என்பது தெரியவில்லை . 

இந்தச் சங்கடங்கள் தீர நமக்கு ஒருவழி தோன்றுகிறது. கோயில்களில் உள்ள சாமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க விரும்புகின்றவர்கள் அவைகளைத் தூக்கிக் கொண்டுபோய் தங்கள் சொந்த வீடுகளில் வைத்துக்கொண்டு கொண்டால் அங்கு யாரும் சத்தியாக்கிரகம் பண்ண வரமாட்டார்கள். சாமிகளுக்கும் உயிர் போய்விடாது. 

அல்லது கோயில்களையே அடியோடு தரைமட்டமாக்கிவிட்டால் தீண்டாதவர்கள் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டிய அவசியமில்லை. கோயில்கள் இருப்பதினால்தானே அதற்குள் பிரவேசிக்க வேண்டுமென விரும்புகின்றனர்? 

போகட்டும் எப்படியாவது செய்யுங்கள், ஆனால் இதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். தீண்டத்தகாத மக்கள் இம்மாதிரி தங்கள் சமதர்மத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். அவர்கள் உரிமையைக் கவனிப்பார் யாருமில்லை. எந்த சுயராஜ்யக்காரனாவது ஜாதிக் கொடுமையை ஒழிக்க வேலை செய்கிறானா? மதம் என்னும் மூடத்தனத்தை ஒழிக்க வேலை செய்கிறானா? இவைகளைப் பற்றி கவலையில்லாமல் இருக்கும் போது இவர்கள் சுயராஜ்யமாவது, பூரண சுயேச்சையாவது! பெறுவதாவது! அனுபவிப்பதாவது! என்று நாம் பரிகாசம் பண்ணுவதை யாராவது குற்றமென்று சொல்ல முடியுமா? 

நகர சபையா? மத சபையா? 

சென்னை நகர சபையார் சென்ற 30-1-32-ல் கௌடய மடாதிபதியான திரு."பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி” அவர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்தார்களாம். அது சமயம், திரு. சுவாமியார், தமது சீடர்களுடன் விஜயம் பண்ணினாராம். வரவேற்புப் பத்திரம் வாசிப்பதற்கு முன் அவருடைய சீடர்களில் ஒருவரால் “தெய்வ ஸ்தோத்திரம்” கூறப்பட்ட தாம். அதன்பின்தான் வரவேற்பு பத்திரம் கொடுக்கப்பட்டதாம். திரு. சுவாமியாரும் கடைசியில் பதில் கூறும் போது “கடவுள் சர்வாந்திரியாமியாய் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றும், “மதக்கல்வி மிகவும் அவசியமானது” என்றும் உபதேசம் பண்ணினாராம். 

போகட்டும், சென்னை நகரசபை உறுப்பினர்கள் நல்ல உபதேசம் பெற்றதற்காக சந்தோஷப்படுகிறோம். உறுப்பினர்களில் எத்தனை பேர் ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று அவர்களின் சீடர்களானார்களோ தெரியவில்லை. சென்னை நகரசபை இனி மதக் கல்வி போதிக்க விரும்பினாலும் விரும்பலாம். ஆனால் அச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் மறந்து விடக் கூடாது. சென்னை நகரத்தின் குடிமக்களில் கடவுள், புராணம், மதம் முதலியவற்றை மறுக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்களிட மிருந்தும் நகரசபைக்கு வரிப்பணம் வந்துகொண்டிருக்கும். ஆகையால் நாஸ்திகக் கல்வியும் போதிக்க வேண்டியது நியாயமாகும் என்பதை நினைப் பூட்டுகிறோம். 

சென்னை நகரசபை இனி கும்பகோணம் சங்கராச்சாரியாருக்கும் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டியதுதான். தருமபுரம். திருவாவடுதுறை முதலிய ஊர்களில் உள்ள பண்டார சன்னதிகளுக்கும் வரவேற்புப்பத்திரம் வாசித்துக்கொடுக்க வேண்டியதுதான். மற்றும் ஜீயர்கள், பிஷப்புகள், போப்புகள், மகந்துகள், முல்லாக்கள் ஆகிய எந்த மதத் தலைவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டியதுதான். இனி நகரசபை மதசபையாக மாற வேண்டி யதைத் தவிர வேறு வழியில்லை என்று நாம் பயப்படுகிறோம். 

தெய்வ சக்தி எங்கே? 

ஸ்பெயின் தேசத்தில் புதிதாக ஏற்பட்டிருக்கும் குடியரசு அரசாங்கம், மக்களின் அறிவைக் கெடுத்து மூடராக வைத்திருக்கும், மதஸ்தாபனங்களின் ஆதிக்கங்களை யெல்லாம் ஒழித்துக் கொண்டு வருகின்றனர். மடங்கள் கோயில்கள் இவைகளின் சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைத் தேச மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தத் தீர்மானித்து விட்ட னர். 

இதைக் கண்ட ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களெல்லாம், மிகவும் கோபம் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராகப் பொது ஜனங்களைக் கிளப்பி விட எவ்வளவோ முயற்சி செய்தனர். அறிக்கை மேல் அறிக்கை வெளி யிட்டனர். மதத்திற்கு ஆபத்து என்று கூச்சலிட்டனர். ஆனால், ஒன்றும் பலிக்க வில்லை. பாவம், அவர்களுடைய கடவுள் அவர்களைக் காப்பாற்றா மல் கைவிட்டு விட்டார். அவர்களுடைய கடவுளுக்கு - தெய்வீக சக்திக்கு - மதத்திற்கு, அரசாங்கத்தின் செய்கையைத் தடுப்பதற்கு வலிமையில்லையா? கடைசியில் அந்தப்பாதிரிமார்க ளெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன், நாட்டை விட்டுப்புறப்பட்டு விட்டார்கள். “ஹாலண்ட்” தேசத்தில் போய் தங்கியிருக் கிறார்களாம்! 

இந்தச் சமயத்தில் நமக்கு ஒரு யோசனை யுண்டாகிறது. கடவுளின் பிரதிநிதியாக-மதத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற தங்களையே காப்பாற்றாத மதம் தேசத்தைக்காப்பாற்ற முடியுமா? மக்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற யோசனை இந்தப்பாதிரிகளுக்கு உண்டாக வில்லையே என்று தான் யோசிக் கிறோம். இதனால் தான் “மதம் மக்களுடைய சொந்த புத்தியையே கெடுத்து விடுகிறது” என்று சொல்லுகிறோம். இதனால் நாம் கிறிஸ்துவ மதத்தையும் கிறிஸ்துவப் பாதிரி மார்களையும் மாத்திரம் கண்டிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக எல்லா மதங்களையும் இப்படித்தான் கூறுகிறோம். 

ஆகையால் இனியாவது மதம் பயனற்ற தென்பதை அறிவீர்களா? 

குடி அரசு - கட்டுரை - 07.021932

Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.